விஜய தசமி:

நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகாநவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிகத் தொன்மைக் காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றோம்.


இத் திருநாளில் (வித்தியாரம்பம் செய்தல் ) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தாபனங்கள் ஆரம்பித்தல் போன்றன ஆரம்பித்தல் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


மகிஷாசுரன், சண்டமுண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நன்னாள்.


நம் தேசத்தில் தர்மத்தின் வெற்றிக்காகப் போரிட்டு, நல்லாட்சி புரிந்த சேரசோழ பாண்டியர், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், வீரசிவாஜி, குருகோவிந்த சிம்மன் முதலிய அனைத்து வீரர்களும், மன்னர்களும் தங்கள் ராஜ்ஜிய மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாள். நம் தேசத்தின் முப்படைகளும், அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களும், கல்விக் கூடங்களும், கலைஞர்களும், சக்தியும், ஊக்கமும், வெற்றியும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடும் திருநாள்.


நவராத்திரியில் ஸ்ரீதேவியைத் (திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.


அர்த்தநாரீசுவரர்

நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி சிவசக்தியாக ஐக்கிய ரூபிணியாக - அர்த்தநாரீரசுவராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.


இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான். அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளங்கப்படுகின்றது. (இச்சை ஸ்ரீ விருப்பம், ஞானம் ஸ்ரீஅறிவு, கிரியா ஸ்ரீ செய்தல், ஆக்கல்)


புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே சிற்றின்ப வாழ்கையைத் தவிர்த்து, உணவை அளவோடு நிறுத்தி, விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டைத் துவக்க வேண்டும்.


விரதம் கைக்கொள்ளுவோர் (அனுஷ்டிப்போர்) அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.


ஒன்பதாம் நாளாகிய மகாநவமி அன்று உபவாசம் (பட்டினியாய்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டு நாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.


விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்த்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.


நவராத்திரியில் கொலு வைப்பது வழக்கம். அமாவாசை அன்றே படிக்கட்டுக்கள் வைத்து பொம்மைகளை வைக்க வேண்டும் என்பதும், விஜயதசமியன்று ஒன்றிரண்டு பொம்மைகளைப் படுக்க வைத்துவிட்டுப் பின்னர் கலைக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம். தேவியரை வணங்குவதால் எதையும் பெறலாம். ராமர் கூட ராவணன் மீது போர் தொடுக்கும் முன் நவராத்திரி விரதமிருந்து சக்தியிடம் ஆசி பெற்றதாகக் கூறுவதுண்டு.


ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவார்கள். நறுமணமுள்ள சந்தனம், பூ (புஷ்பம்) இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்து அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் அவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச்செய்ய வேண்டும்.


குமாரி பூஜை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூஜைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்பட வேண்டும். பூஜிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். குமாரிகளுக்கு ஆடை, ஆணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞ்சள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும். நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயத பூஜை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.


நவராத்திரியின் போது பெண் குழந்தைகளை அம்பாளாக பாவிப்பது ஏன்?

நவராத்திரியின் ஆரம்பநாளில்தான், சகல தேவர்களின் அம்சங்களும் கொண்டவளாக அம்பிகை அவதரித்தாள். மஹாசக்தியான அவள், ஒன்பது நாட்கள் தவம் இருந்து அசுரர்களை அழித்து, முடிவில் மகிஷாசுரனை மாய்த்தாள். நவராத்திரி நாளில் தான் அம்பிகை பிறந்தநாள் என்பதால், அவளை அந்த நாட்களில் சிறுமியாகவே பாவித்து பூஜிப்பது சிறப்பானதாகச் சொல்லப்படடுள்ளது. அதுமட்டுமல்ல, நவராத்திரி நாட்களில், முதல்நாள் தொடங்கி பத்தாம் நாள் வரை குறிப்பிட்ட வயதுள்ள பெண் குழந்தைகளை, குறிப்பிட்ட பெயர்களில் அழைத்து, அலங்கரித்து பூஜிக்க வேண்டும் என்ற பூஜா விதியும் உண்டு.


இரண்டு வயதுக் குழந்தையை முதல் நாள் அழைத்து குமாரீ என்றும் மறுநாள் மூன்று வயதுக் குழந்தையை த்ரிமூர்த்திதேவியாக பாவித்தும்


மூன்றாம் நாளில் கல்யாணீ என்ற திருநாமத்தால் நான்கு வயதுக் குழந்தையையும் பூஜிக்க வேண்டும்.


இந்த வரிசையில் நான்காம் நாளில் ஐந்து வயதுக்குழந்தையை ரோகிணிதேவி எனவும்


ஐந்தாம் நாள், ஆறுவயதுக் குழந்தையை காளிகா தேவியாக பாவித்தும்


ஆறாம் நாள் ஏழுவயதுக் குழந்தையை சண்டிகையாகப் போற்றியும் ஏழாவது நாளில் எட்டு வயதுக் குழந்தையை சாம்பவி என அழைத்தும் எட்டாம் நாளில் ஒன்பது வயதுக் குழந்தையை துர்க்கையாக பாவித்தும் வணங்கிடல் வேண்டும்.


பத்தாம் நாளான விஜயதசமியன்று, பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராதேவியாக பாவித்து வழிபடுவது மிகமிகச்சிறப்பானது. குழந்தையும் தெய்வமும் கூடி நிற்கும் காலம், நவராத்திரி. அப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் வரும் குழந்தையும், அம்பிகையின் வடிவமே.


ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்க முடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம்; செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட்பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.


MAKE YOUR CONTRIBUTIONS

Donate for Sevas & Homas to our Holy Universal Mother Goddess Sri Merupuram Mahabhadrakaliamman, London and get divine blessings.

Donate Now >>