‘‘தனந்தரும் கல்வி தருமொரு நாளுந் தளர் வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தருநெஞ்சில் வஞ்சமில்லா
வினந்தரு நல்லன வெல்லாந் தருமென்ப ரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழ லாளபி ராமி கடைக் கண்களே”

ஸ்ரீ மேருபுரம் மஹா பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாறு

ஐரோப்பா கண்டத்திலே இங்கிலாந்து மாநகரத்தின் கிழக்கு லண்டன் பகுதியிலே வோல்த்தம்ஸ்ரோ கிராமத்தில் ஸ்ரீ மேருபுரம் எனும் புண்ணிய பகுதியிலே வீற்றிருந்து அருள் புரிகின்றாள் அழகு சௌந்தரி,அகில லோக மஹா பத்திரகாளி அம்பாள்.


இவ்வாலயமானது அளவையூர் பெருமாக்கடவை பிள்ளையார் கோவில் ஆதீன பரம்பரைக்குரு சிவஸ்ரீ லிங்கமூர்த்திஐயர் கமலாம்பிகை அம்மா தம்பதிகளின் மூத்த புதல்வர் காளிதாஸன் கயிலை சிவஸ்ரீ லோகநாதக்குருக்கள் அவர்கள் காளி அம்பாள் மீது கொண்ட அளப்பெரும் பக்தியாலும் பக்தர்களுடைய ஆதரவாலும் தனது தனிப்பட்ட முயற்சியின் கீழ் அம்பாளுக்கு ஒரு ஆலயம் அமைய வேண்டும் என்கிற ஆசையினால்,பொரஸ்ரோட்டில் சொந்தமாக இடம் தேடி அங்கு ஆலயத்தினை அமைப்பதற்கு தீர்மானித்தார். அழகுற சிறிய ஆலயம் அமைத்து பத்திரகாளி அம்பாளும்,பரிவார மூர்த்தியாக விநாயக பெருமானும் பிரம்ம ஸ்ரீ உமாபதி (ரவி) சர்மா அவர்களுடைய ஆதரவுடன் லண்டனுக்கு எடுத்து வரப்பட்டது. அழகிய விக்கிரகங்களை பிரம்மஸ்ரீ பாலகுமாரசர்மா அவர்கள் வடிவமைத் தார்


ஆலய மஹா கும்பாபிஷேகம்

ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் 2000 ஆம் ஆண்டு ஆவணி ஓணத்தினத்தன்று,மாவிட்டபுரம் வீணியவரை அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ துரை மணிவண்ண சிவாச்சாரியார் அவர்களுடைய தலைமையில் லண்டனிலுள்ள சிவாச்சாரியார்களும் ஒன்றிணைந்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நாட்களில் வெவ்வேறு நாடுகளில் இருந்தும் பல சிவாச்சாரியார்கள் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது. மண்டலாபிஷேக பூர்த்தி தினத்தன்று கும்பாபிஷேக மலரும் வெளியிடப்பட்டது.


பரிவாரமூர்த்திகள் கும்பாபிஷேகம்

2001ம் ஆண்டு புரட்டாசி மாதம் பூதேவி,ஸ்ரீதேவி சமேத மஹாவிஷ்ணுப் பெருமானுக்கும்,ஸ்ரீவள்ளி,தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கும்,ஆஞ்சநேய பெருமானுக்கும் இலண்டன் சிவாச்சார்யர்களால் நடத்தி வைக்கப்பட்டது.


புதிய கோவில்

பெரிதாக்கபட்டு ஆனிப் பௌர்ணமி நன்நாளில் கருவறைக்கான அத்திவாரமிடப்பட்டது. பக்தர்களின் ஆதரவுடன் இந்திய சிற்ப கலைஞர்களின் வேலைப்பாடுகள் ஆரம்பமாகின. அதிசயிக்கத்தக்க வகையில் அழகிய தெய்வீக சிற்க வேலைபாடுகளுடன் கூடிய விமானத்தையுடைய மூலஸ்தான கருவறை,பலிபீடம்,தம்பபீடம்,சபைகள் மற்றும் வைரவப் பெருமானுக்கு சிறிய சிற்ப விமானத்துடன் கூடிய பரிவாரக் கோயில்களும் உருவாகின.


கோபுர வாயில்

கோவில் வேலைகள் பூரணமுற்ற நிலையில்,கோபுரம் அமைக்க விரும்பி அதனையும் அழகுற தெய்வீக சிற்ப வேலைகளுடன் இரு பக்கமும் துவார பாலகியருடன் அமைக்கப்பட்டுள்ளது.


சொர்ணபந்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 2009

2009ம் ஆண்டு பங்குனித் திங்கள் உத்திர நட்சத்திரத்தில்,அலங்காரபூசனம் சிவஸ்ரீ கண்ணன் சோமஸ்கந்தக்குருக்கள் அவர்களுடைய தலைமையில் இலண்டன் சிவாச்சார்யார்களும் ஒன்றிணைந்து சொர்ணபந்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. முதலாவது சொர்ணபந்தன மஹா கும்பாபிஷேகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 48 நாட்கள் அஷ்டோத்திர சங்காபிஷேகமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


முதலாவது மஹோற்சவம் 2010

அடியார்களது அளப்பெரும் முயற்சியினால் சித்திரை மாதம் 10 நாட்கள் மஹோற்சவம் சிவஸ்ரீ சபாரத்தின பரமேஸ்வரக்குருக்கள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மஹோற்சவத்திற்குரிய ஐந்தொழில்களை குறிக்கும் வகையில் கொடியேற்றத்திருவிழா, வாகனத்திருவிழா, வேட்டைத்திருவிழா, சப்பரத்திருவிழா, தேர்த்திருவிழா மற்றும் பூங்காவனத்திருவிழா, வைரவர் மடை என சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


MAKE YOUR CONTRIBUTIONS

Donate for Sevas & Homas to our Holy Universal Mother Goddess Sri Merupuram Mahabhadrakaliamman, London and get divine blessings.

Donate Now >>