வரலட்சுமி விரதம்

சுமங்கலி விரதம் எனவும், வரலட்சுமி விரதம் எனவும் அழைக்கப்படும் இவ் விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்கள் மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும். சுமங்கலியாக நீண்டகாலம் வாழ்வதென்பது பெறுதற்கரிய பேறாகும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், கணவன் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் உயிர் வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவதுடன், இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும். கணவன நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதனால் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.


ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ் விரதம் இந்த வருடம் ஆடிமாதத்தில் வரும் பௌர்ணமி திதியில் அமைவதால் மிகவும் சிறப்புபெறுகின்றது. ஆடி மாதமும், பௌர்ணமி திதியும் அம்பிகையின் அருள் நிறைந்த காலமாகும்.


லோக மாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிகளாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.


மகாலெட்சுமியை தனலெட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலெட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள். லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கும் அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும்.


விரதம் அனுஷ்டிக்கும் முறை

இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரியைக் பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம், குங்குமம் வைத்து மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.

 

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு , குங்குமம் கொடுக்க வேண்டும். நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

 

சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.

 

தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அயலில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலஷ்மி பூஜைகளில் கலந்தும் விரதம் அனுஷ்டிக்கலாம். பெரும் பாலான இந்தியநாட்டவர்கள் வீட்டில் கும்பம் வைத்து வழிபடுகின்றனர். ஆனால் இலங்கையில் அனேகமானோர் அம்பிகை ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் விசேஷ பூசைகளில் பங்குபெற்று தம் விரதத்தை நிறைவேற்றுகின்றனர். உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும்.


MAKE YOUR CONTRIBUTIONS

Donate for Sevas & Homas to our Holy Universal Mother Goddess Sri Merupuram Mahabhadrakaliamman, London and get divine blessings.

Donate Now >>