தை அமாவாசையும் அதன் சிறப்பும்
தை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.
வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம் - சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள்.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன், எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.
சூரியனைப் ‘பிதிர் காரகன்” என்றும், சந்திரனை ‘மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய , சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடுகின்றனர்.
அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.
அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிய சிறப்பு உண்டு.
இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாவைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.