மார்கழி நோன்பு

மார்கழி மாதத்தில் பெண்கள் நோற்கும் விரதங்களில முக்கியமானது ‘மார்கழி நோன்பாகும்”. மார்கழியில் நோற்பதால் ‘மார்கழி நோன்பு” என்றும், கன்னிப் பெண்களாலும், ‘பாவை” அமைத்து நோற்கப்படுவதாலும் ‘பாவை நோன்பு” என்றும் அழைக்கப்பெறுகின்றது. ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டது. மார்கழி நோன்பு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்துவரும் நோன்பாகும் என்பது பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களால் அறியலாம்.


மணமாகாத பெண்கள் இந்த நோன்பை நோற்கின்றனர். ‘அம்பா ஆடல்” என்பதற்குத் தாயுடன் ஆடுதல் என்று பொருள். பாவை போல ஒரு பெண் பிள்ளையின்-தாய் கடவுளின் வடிவை அமைத்து வணங்கி வழிபட்டுப் பின் நீராடுவர். பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை. இது நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர். கற்பே மழை தரும் என்று நம்பிய தமிழுலகம் இக்கன்னியர் நோன்பை மழைக்கென நோற்கும் நோன்பாகவும் கருதினர். பின்னர் இந்த இரண்டையும் வேறு என பிரிப்பதும் வழக்கமாகிவிட்டது.


வைணவப் பெண்கள் கண்ணனின் நெறிவாழும் ஆடவரையே கணவனாகப் பெறவும். சைவ மங்கையர் சிவநெறியில் தோய்ந்த உள்ளம் உடைய ஆடவரையே கணவராகப் பெறவும் வேண்டிச் சிறப்பாக இந்நோன்பை மேற்கொள்கின்றனர்.


சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் ‘நோன்பை” ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள். ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள்.


சைவக்கன்னியர்கள் பனி நிறைந்த மார்கழி மாதத்தில் பொழுது புலர்வதன் முன் மற்ற தோழியர்களையும் (பெண்களையும்) எழுப்பி, ‘கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே” எனஅழைத்து ஆற்றங்கரை சென்று, ‘சீதப் புனல் ஆடி சிற்றம்பலம் பாடி” ஆலயம் சென்று ‘விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம் உருகி உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவர் ஆக” அருள் தருவாய் என வேண்டுவர்.


வைணவ கன்னியர்களும் பொழுது புலவர்தன் முன் எழுந்து தமது தோழியர்களை அழைத்து ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள மணலினால் ‘பாவை’ போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கௌரி தேவியாக ஆவகணம் செய்து, பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபடுவார்கள்.


மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது பாடியருளிய ‘திருவெம்பாவை” யும் பன்னிரண்டும், ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் பாடியருளிய பாவைப்பாட்டாகிய ‘திருப்பாவையும்” பாவைப்பாட்டுக்களில் சிறந்தவையாகும். கன்னிப்பெண்கள் தோழியரை நீராட வரும்படி அழைக்கும் போதும், தோழியருடன் நீராடும் போதும் இப்பாவைப் பாடல்களை பாடி ஆடுகின்றனர்.


அம்பாள் ஆலயங்களில் அதிகாலையில் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்களும், திருவெம்பாவை 20 பாடல்களும் பாடப்பெறுகின்றது. வைணவ ஆலயங்களில் ஆண்டாள் பாடியருளிய திருப்பாவை 30 பாடல்களும் பாடப்படுகின்றன.


MAKE YOUR CONTRIBUTIONS

Donate for Sevas & Homas to our Holy Universal Mother Goddess Sri Merupuram Mahabhadrakaliamman, London and get divine blessings.

Donate Now >>