ஆடிமாதமும் அம்பிகையின் அருளும்

ஆடி மாதம் - புண்ணிய காலம் என புராணங்கள் வர்ணிக்கின்றன. வானியல் கணிதப்படி, ஒரு வருடத்தை இரு அயனங்களாகப் பிரிந்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயணம்; என்றும் அழைக்கப்பெறும். சூரியன், ஆடி மாதத் தொடக்கத்தில், தனது பாதையை தெற்கு நோக்கி (தக்ஷ்ணம்) செல்லும் (அயனம்) காலம். ஆகவே இது தக்ஷணாயன புண்ணிய காலம் என்றழைக்கப்படுகின்றது. (தை மாதம் சூர்யன் வடக்கு (உத்தரம்) நோக்கி செல்வதால் உத்தராயண புண்ணிய காலம் ஆகும்.) உத்தராயணம் தேவர்களின் பகல் காலமாகவும், தட்சிணாயணம் இரவுக் காலமாகவும் அமைகின்றது. அதாவது, பூலோகத்தில் ஒரு வருட காலம் என்பது தேவலோகத்தில் ஒரு நாளாகும். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.


தஷ்ணாயணம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படுகின்றன. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்திரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடி மாதத்தில்தான். இது ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் கருதப்படுகிறது.


ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ‘ஆடிப் பட்டம் தேடி விதை” என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக அமைகின்றது.


ஆடி மாதத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம் இராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன் சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டினுள் சஞ்சரிப்பதால் (ஒன்று சேருவதால்), சந்திரன் ஆழுமைப் பலம் அடைகிறது. அதாவது சக்தியின் பலம் அதிகரிக்கின்றது. ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தை ‘ஆஷாட மாதம்” என்றும் கூறுவார்கள்.


ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக போற்றப்பெற்றுகின்றது. ஆடி மாதத்தில்தான் பார்வதி தேவி ஒரு கல்பத்தில் அவதரித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீமீனாட்சி அம்பாள் அவதரித்த மாதமாக இருப்பதனால். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார் என புராணங்கள் கூறுகின்றன.


மழைக்காலத் தொடக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம்; பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் ஆடி மாதத்தில் கொண்டாடி அம்மனை வழிபட்டு வந்துள்ளனது. வேம்பும் எலுமிச்சையும் கூழும் அம்மனுக்கு விருப்பமானவைகளே.


ஆடி மாதத்தில் வரும், ஆடிப் பூரம், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள், ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி என்பன மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆடி மாதம் துர்க்கை, அம்பிகை, காளி, பேச்சி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்க உரியதாகவும் கருதப்படுகிறது. மஞ்சள், வேம்பு, குங்குமம் பூசைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


உமையவளாகிய பராசக்தியை லோகமாதா என்று வழிபடுகிறோம். அவளே கோயில்களில் இறைவனோடு சேர்ந்து அம்மையப்பராய் அருள்பாலிக்கிறாள். இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்றான அருளல் என்னும் அருட்சக்தியே அம்பிகையாக உருவெடுத்து அருள்புரிவதாக ஆகமங்கள் கூறுகின்றன. அதே நேரம், கருணையே உருவான அம்பிகை உக்கிர ரூபமாகி அசுரசக்திகளை அழிக்கும் போது ‘காளி” என்று பெயர் பெறுகிறாள்.


மனித மனதில் காமம், கோபம், கருமித்தனம் (லோபம்), மோகம், ஆணவம் (மதம்), பொறாமை (மாச்சர்யம்) ஆகிய ஆறு வகையான பகைவர்கள் இருக்கிறார்கள். அப்பகைவர்களை வெல்லும் சக்தியை அருள்பவள் அம்பிகையே. இவர்களை அடக்கி ஆளும் சக்தியை நாம் பெற்று விட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.


இந்தியாவில் ஆடிப் பூரம் தினத்தில் அம்பிகை கருவுற்று இருப்பதாக ஆவகணம் செய்து முளைப்பயிற்றை அம்பிகையின் வயிற்றில் பிணைத்து, கருக்கோலம் கொண்டிருப்பதாக எண்ணி பிரார்த்தனை செய்வார்கள். நூற்றுக்கணக்கான முளைப் பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். முளைப் பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காவும், நற்குழந்தைப் பேற்றுக்காவும் கட்டப்படுவது ஆகும்.


கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது வழக்கமல்லவா? அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தியும் வழிபாடுகள் நடைபெறும். ஆகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில், பூரம் நக்ஷத்திரம் இணையும் ஆடிப் பூர நாள் ஆகும்.


அகிலாண்ட நாயகி வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, நெஞசம், நிறைந்து, தம் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள். அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் - அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது, ஆனந்தத்தை வழங்கக்கூடியது வளமான வாழ்க்கையை வழங்கக் கூடியது.


அம்பிகை பூப்படைந்ததாக ஆவாகணித்து பூப்புனித நீராட்டு விழாவும் நடத்துகின்றார்கள். அம்பிகை மகப்பேறு அருளுபவராகவும், விவாகமாகாத கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய அருள்பவராகவும், தாலிப்பாக்கியம் நிலைக்க அருள்பவராகவும் இருப்பதனால் இது போன்ற விழாக்களை நம் முன்னோர் முன்னெடுத்தனர்.


மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா பத்துநாட்கள் நடக்கிறது. இவ்விழா மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாகும். ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருளுவார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவர்.


செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனைத் தரிசித்து, கூழ் படைத்து, ஏழைகளுக்கு தானம் செய்வது சிறப்பாகும். ஆடிப்பிறப்பிலன்று ஆடிக்கூழ் காச்சி ஆடிப் பாடி உண்ணும் வழக்கம். தற்பொழுதும் யாழ்ப்பாணத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சைவ மக்களால் ஒரு கொண்டாட்டமாக கொண்;;டாடி வருகின்றனர். ‘ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் தோழர்களே” என நாவாலியூர் சோமசுந்தரப் நவாலியூர் புலவர் பாடிய பாடலும் ஆடிப்பிறப்பிற்கு ‘பனங்கட்டி கூழும், கொழுக்கட்டையும்” முக்கியமான பண்டங்களாக கூறப்பெற்றிருக்கின்றன.


தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும், தென் மாவட்டங்களில் ஆடிச் செவ்வாயும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் கோயில்களில் பெண்கள் அம்பாளுக்கு மாவிளக்கு போடுவார்கள். இல்லத்தரசிகள் குத்துவிளக்கு பூஜை செய்வர்.


ஸ்ரீ துர்கா தேவிக்கு எலுமிச்சைபழ தீபம் ஏற்றுவார்கள். செவ்வரளிப் பூக்களை மாலையாகத் தொடுத்து ஸ்ரீவிஷ்ணு துர்க்கைக்கு சார்த்தி அர்ச்சனை செய்தால், கன்னிப் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு, புத்திர பாக்கியம் ஏற்படும்.


அம்பிகை தவமிருந்த அற்புத தலம் சங்கரன் கோவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது. இக்கோயிலில், அம்பாளின் தவத்தை மெச்சிய இறைவன் அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் சங்கரநாராயணராக காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சி ஆடிபவுர்ணமியில் நிகழ்ந்ததாக ஐதீகம். ஆடித்திருவிழாவின் 12ம் நாளில் ‘ஆடித்தபசு “ என்னும் பெயரில் இவ்விழா நடைபெறும். அன்று கோமதி அம்பாளுக்காக ரிஷபவாகனத்;தில் சங்கநாராயணர் எழுந்தருள்வார்.


பன்னிரு ஆழ்வார்களில் சூடிக்கொடுத்த சுடர்கொடியாகத் திருமாலைப் பூமாலையாலும், பாமாலையாலும் துதிக்கும் பேறு பெற்றவள் ஆண்டாள். இவள் அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம், உயிர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்கு அருள்பாலிக்க பூமாதேவி, ஆண்டாள் நாச்சியாராக பிறப்பெடுத்தாள்.


வேதங்களின் வித்தாக விளங்கும் திருப்பாவையை நமக்கு வழங்கினாள். திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் உள்ளன. ‘ஏழேழு பிறவிக்கும் கண்ணா நீயே எனக்கு உற்ற உறவு” என பாவைப்பாடலில் வலியுறுத்துகிறாள். ஆயிரமாயிரம் ஆபரணம் இருந்தாலும், கழுத்துக்கு அணிகலனான மாங்கல்யம் தான்உயர்ந்த ஆபரணம்;. இளம் பெண்களுக்கு மனதிற்கேற்ற நல்ல கணவன் வாய்க்க, ஆடிப்பூர நன்னாளில் ஆண்டாளை அவசியம் வணங்க வேண்டும்.


MAKE YOUR CONTRIBUTIONS

Donate for Sevas & Homas to our Holy Universal Mother Goddess Sri Merupuram Mahabhadrakaliamman, London and get divine blessings.

Donate Now >>