சித்திரா பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பௌர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப்பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்;திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.


இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால் இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும் அமைகின்றது.


இத்தினத்தில் ஆலயங்களிலே குறிப்பாக பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது. சில ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.


சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருந்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது. ஒவ்வொருவரும் செய்யும் புண்ணிய பாவங்களைக் கணிப்பவர் சித்தர் புத்திரனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்களை நமது இறப்பின் பின் கணித்து அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ, மறு பிறவியில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.


எமதர்மனின் கணக்கரான சித்ர குப்தன் சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை மணந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்னை மீனாட்சி, மதுரையில் சொக்கநாதரை மணந்ததும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் தான். கள்ளழகர் மதுரை வைகையாற்றில் சித்திரை மாத பவுர்ணமியில் விழா காண்கிறார்.


இந்த நம்பிக்கையின் மூலம் நாம் தீயனவற்றைத் தவிர்த்து நல்வழியில் வாழ வழியேற்படுகின்றது. சித்திர புத்திரனாரின் தீர்ப்பின்படியே கர்ம வினைகள் தொடரும் என்பதால் அவரை நினைத்து விரதமிருந்து வாழ்வைச் செம்மைப்படுத்தி நேரிய வழியில் செயற்பட மனப்பக்குவம் பெற இவ்விரதம் உதவுகின்றது. அதனால் போலும் ‘புண்ணியம் (தர்மம்) செய் புனிதனாவாய்” என்பதை உணர்த்த அம்பாள் ஆலயங்களில் சித்திர புத்திரனார் கதை படித்து சித்திரைக் கஞ்சி வார்த்து தர்மம் செய்யத் தூண்டுகிறார்கள். அத்துடன் அம்பிகையின் ஆலயங்களில் ‘குளிர்த்தி “ செய்வான் மூலம் அம்பிகையின் சீற்றத்தை கோபத்தை, தணிப்பதால் அம்பிகையின் சீற்றத்தால் ஏற்படும் அம்மாள் வருத்தம் (கொப்பளிப்பான், சின்னம்மை ) போன்றவை ஏற்படாது என்பது ஐதீகம், அதனால் ஆலயங்களில் குளிர்த்தி பெரு விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.


மனதைச் செம்மைப்படுத்தி பகுத்தறிந்து தீயன தவிர்த்து, நல்லனவற்றை நாடி செயற்பட உறுதி கொள்ளும் இச்சித்திர புத்திரனார் விரதமானது மனித குலம் வாழ வேண்டிய சீரிய வழியைச் செப்பனிடும் ஒரு முக்கிய விரதமாகவும் கொள்ளப்படுகின்றது.


இறைவியாகிய அம்பாள் இயற்கையின் சக்தியாக தர்மத்தின் காவலாக, உலக இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவதாக இந்துக்கள் கொள்கின்றனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த அம்பாள் காலத்திற்குக் காலம் பல்வேறு அவதாரங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.


பூமா தேவியாக, பொறுமையின் இருப்பிடமாக வீற்றிருக்கும் அன்னை பொறுமை இழந்ததால் எரிமலையாகக் (கிளர்ந்தெழவும்) புயலாக, வெள்ளமாக, வரட்சியாக, (ஆழிப்பேரலையாக) அதிர்வாக, கொடுநோய்களாக வெளிப்பட்டு தன் சக்தியைக் காட்டி உலகத்தோருக்குப் புத்தியைப் புகட்டும் ஆற்றல் மிக்கவள்.


தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந் நன்நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால் நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூர விலகி விடும். மங்களம் பொங்கும். நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன. அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.


வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம். உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு, நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.


தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து வழிபாடு செய்வதைப் போன்று தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி தினத்திலே விரதத்தை மேற்கொள்கின்றனர். தாயாரை இழந்தவர்கள் இத்தினத்திலே விரதமிருந்து வழிபாடு செய்தால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.


MAKE YOUR CONTRIBUTIONS

Donate for Sevas & Homas to our Holy Universal Mother Goddess Sri Merupuram Mahabhadrakaliamman, London and get divine blessings.

Donate Now >>